
மனசுக்கு வால் முளைத்து கொப்பு தாவும்
பூகோளத்தின் மூலையில் தனியாய் நின்று பழகும்
Aprocalipto, Avatar என்று காட்சி மாறும்
ஏன் என்று தெரியாத கேள்வி
ஏகாந்தம் பூசிக்கொண்ட வானம்
கண்ணை மூடி காட்சி மறக்கையில்
கற்பனையில் வந்து போகும் கரும்புள்ளி
போகுமிடமெல்லாம் பூத்து கிடக்கிறது - அரைகுறையாய் விளங்கும்
அந்நிய மொழி சம்பாஷனைகள்
கணன்று வரும் கோபமும்....
யதார்த்ததின் மீதான பிடிப்புகளும்....
தனியான பயணங்களை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறது மனசு
எப்போதோ கேட்ட பாடல் மீதான ஈர்ப்பு
இப்பொழுதும் விளங்காத இருண்மை
என்னவென்று தெரியாத தருணங்களில்
எதுமே செய்யாது இருக்கிறது உள்ளுணர்வு
"இது இப்படித்தான்"
இன்னும் எத்தனை நாள்களுக்கு?
ஏதேதோ....
கனவை கடந்து போகும் கற்பனைகள்
தூக்கம் மறந்த இரவுகள்....
சூன்யத்தில் இருப்பை தக்க வைப்பதற்கான போராட்டங்கள்....
இன்னும் தொடர்கின்றன
புரிதலும்....
தெரிதலும்....
மையப்புள்ளியில் மனசு நிற்கிறது
கண்கள் மட்டும் காட்சி திரைக்கு அப்பால்!
அவமானப்பட்ட தருணங்கள் அப்படியே ஆழ்மனதில் நிற்கிறது!
மொழிகளின் ஆளுமையை இழந்து விட்ட பிறகு....
ஒற்றை பெருமூச்சு!
இயலாமையின் வீச்சு!
எங்கோ தொலைவில் ஒற்றை காகம் கரைகிறது.