Sunday, June 6, 2010

எனக்கான ஆகாயம்

 


மிக நீண்ட வனாந்தரத்தை கடக்க வேண்டிய
பட்சியை ஒத்த
கட்டாயத்தில் நான் !
கண் முன்னே விரிவது பிறிதொரு வனாந்தரமாகவோ
அல்லது கனல் கனன்ற வனமாகவோ இருக்க கூடும்
அந்தி சாயும் பொழுதுகளில்
கால் பற்ற கொப்பற்ற
இறக்கை வலிக்கும் பயணமாக்கூட
அது பரிணமிக்க கூடும்

சூரியனின் தகிப்பை
நட்சத்திரங்கள் முளைத்த வெளிகளிலும்
உணர முடியும்
நேற்றைய கிளையின் கொப்பை
ஒத்த உபசரிப்பை
ராத்திரியின் சாயம் போகும் வரை
ரகசியம் பேசும் இலைகளை
பின்னதான ஒரு நாளில் மீண்டு சந்திப்பதும்
நெடுதுயில் கொள்ளும் தருணங்களும்...

புள்ளினங்கள் அற்ற ஆகாயத்தில் புள்ளியாய் மிதக்கும் போது 
இறக்கை இன்னும் இலேசாகிறது,
மனசு கனக்கிறது
ஏழு மலை ஏழு கடல் தாண்டிய சாகசங்கள்...
நிறங்கள் நிரந்தரமற்று நிதர்சனங்களாய்
நீல கடலும் நெடுதூரம்

மரணத்தின் வலிகளுடன் உயிர் உருகிய தவங்கள்
வரங்கள்
ஏதுமற்ற ஒன்றிற்காய்
உணர்வுகள் உச்சுக்கொட்டுகின்றன...
ஆனாலும்
எனக்கான ஆகாயம்
இன்னும் திறந்தே இருக்கிறது !

கடந்து போனவர்கள்

free counter

நான்....

My photo
Colombo, Sri Lanka
மனசுக்குள் ஒரு சாத்தான் அது மெல்ல வளர்ந்து விஸ்வரூபம் எடுக்க துடிக்கிறது.... நடிக்கிறது! அந்த காட்சி குழப்பத்தில் மனசும் கொஞ்சம்தான் கிறங்கி போகிறது! இன்றோ, நாளையோ... நான் ஒரு துரோகி! அல்லது நேற்றாகக்கூட இருந்திருக்கலாம்!

கூடவே வருபவர்கள்